AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Thursday, 6 February 2014

பிப்ரவரி 12, 13ம் தேதியில் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்!


சென்னை: மத்திய அரசு ஊழியர் சம்மேளனம் தமிழ் மாநிலக்குழு தலைவர் ராமமூர்த்தி, பொதுச்செயலாளர் துரைபாண்டியன், பொருளாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் அளித்த பேட்டி: மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் உட்பட பல்வேறு போராட்டங்கள் செய்த பிறகு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7வது ஊதியக்குழு அமைக்கப்படுமென்ற ஒரு அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் வெளியிட்டார். மத்திய அரசு கேட்டுக் கொண்டபடி, கடந்த ஆண்டு அக்டோபர் 25ம் தேதி சம்பள வரையறை குறித்து ஊழியர் தரப்பும் அரசுக்கு இறுதி செய்து வழங்கியது.

              ஆனால் அரசு சம்பளக் குழுவின் உறுப்பினர்களை நியமிப்பது குறித்தோ, பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது குறித்தோ, இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்தோ எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே, மத்திய அரசு ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய செயற்குழு கடந்த மாதம் டில்லியில் கூடி வரும் 12 மற்றும் 13 அன்று வேலை நிறுத்தம் செய்வதென்று முடிவெடுத்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் 12 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் அகில இந்திய அளவிலும், 1.5 லட்சம் பேர் தமிழகத்திலும் பங்கேற்க உள்ளனர்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.


பிப். 12,13ல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் 12 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்பர்
சென்னை, பிப்.5-
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை 2014ம் ஆண்டு ஜனவரி முதல் அமல்படுத்த வலியுறுத்தி பிப் 12, 13ம் தேதி களில் நாடு முழுவதும் நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 12 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் கலந்துகொள்கிறார்கள்.சென்னையில் புதனன்று (பிப்.5) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் எம். துரைப்பாண்டியன் கூறியதாவது:
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை 2014ம் ஆண்டு ஜனவரி முதல் அமல்படுத்த வலியுறுத்தி பிப்ரவரி 12 மற்றும் 13ம் தேதிகளில் நாடு முழுவதும் இரண்டு நாள் வேலைநிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் இந்தியா முழுவதும் 12 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் தமிழகத்தில் ஒன்றரை லட்சம் ஊழியர்களும் ஈடுபட உள்ளனர்.50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்து வழங்க வேண்டும். பென்ஷன் உள்ளிட்ட அனைத்து நிதி பயன்களையும் உயர்த்தி வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தவேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்.

            இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஏ.ஜி. அலுவலகம், வருமானவரி, தபால் துறையில் உள்ள அனைத்து சங்கங்கள், சாஸ்திரி பவன் மற்றும் ராஜாஜி பவன் ஊழியர்கள் என அனைத்து மத்திய அரசு பணியாளர்களும் பங்கேற்க உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பாகவே மத்திய அரசு எங்களின் கோரிக்கையை ஏற்று செயல்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த வேலைநிறுத்த போராட்டம் இம்மாதம் நடத்தப்படுகிறது. மேலும், இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பாபா அணுமின் நிலையம், தூத்துக்குடி கனநீர் ஆலை, சிர்கோனியம், கல்பாக்கம் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து அணுசக்தி துறை பணியாளர்களும் பங்கேற்பார்கள்.

           மத்திய அரசு பணியாளர்களை பொறுத்தவரை தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேர் உள்ளனர். இந்த இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தபால்துறை உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு பணிகளும் முற்றிலுமாக முடங்கும்.இவ்வாறு அவர் கூறினார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சம்மேளனத் தலைவர் ஜே.ராமமூர்த்தி, பொருளாளர் எஸ்.சுந்தரமூர்த்தி, வருமான வரித்துறை ஊழியர் சம்மேளன தமிழ்நாடு மாநில செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் ஜெயசந்திரன், ராஜாஜி பவன் ஊழியர் சங்கசெயலாளர் பாலசுந்தரம், சாஸ்திரி பவன் ஊழியர் சங்க செயலாளர் சாம்ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment