CHIEF PMG, TN அவர்களுக்கு தமிழ் மாநில அஞ்சல் மூன்று மற்றும்
தமிழ் மாநில NFPE GDS சங்கத்தின்
நெஞ்சார்ந்த நன்றி !
அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம். கடந்த 24.09.2014 அன்று தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பிலும் தமிழ் மாநில NFPE GDS சங்கத்தின் சார்பிலும் , நம்முடைய அஞ்சல் மூன்றின் பொதுச் செயலர் தோழர். N .S . அவர்களுடன் நாம் சென்று சில பிரச்சனைகளை அளித்து விவாதித்த விபரம் ஏற்கனவே நம் அஞ்சல் மூன்று வலைத்தளத்தில் கடந்த அக்டோபர் 1 ந் தேதி அன்று வெளியிட்டிருந்தோம். அதில் நாம் அளித்திருந்த ஏழு கடிதங்களில் , இரண்டு பிரச்சினைகளுக்கு நமது CHIEF PMG அவர்கள் தற்போது தீர்வளித்துள்ளார்.
1. தபால் காரர் தேர்வில் வெற்றிபெற்றிருந்தும் நீதி மன்ற வழக்கின் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் இருந்த 10 க்கும் மேற்பட்ட GDS ஊழியர்களுக்கு பணி நியமன உத்தரவு.
2012 க்கான தபால்காரர் தேர்வு 2013 ஏப்ரல் திங்களில் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஆங்காங்கே பல GDS ஊழியர்கள் பணி நியமனம் பெற்றனர். ஆனால் ANSWER KEY தவறு என்று கண்டுபிடிக்கப்பட்டு நம்முடைய மாநிலச் சங்கத்தால் REVALUATION செய்திட பிரச்சினை கடந்த 23.09.14 இல் எழுப்பப் பட்டது.(பார்க்க மாநிலச் சங்க வலைத்தளச் செய்தி - செப். 2013 )
இதன் காரணமாக மாநிலமெங்கும் கிட்டத்தட்ட 10 க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு விடைத்தாள் மறு மதிப்பீடு செய்து REVISED RESULT அளிக்கப்பட்டது. ஏற்கனவே பணி நியமனம் பெற்ற தோழர்கள் தங்களின் பணி நியமனத்தை ரத்து செய்திடக் கூடாது என்று கோரி நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடையும் பெற்றனர் . இதனால் உரிய காலிப் பணியிடம் இல்லை என்றும் தடை ஆணை உள்ளதென்றும் முறையாகத் தேர்வு பெற்ற இந்த GDS ஊழியர்களுக்கு தபால்காரர் பதவி அளிப்பது நிறுத்தப் பட்டிருந்தது.
இந்தப் பிரச்சினை, பாதிக்கப்பட்ட தோழர். முத்துராமன் என்பவரை ஆதாராமாகக் கொண்டு , பலகாலமாக நம்மால் எழுப்பப் பட்டாலும் , நீதி மன்ற வழக்குகள் முடிவடையாத காரணத்தால் சிக்கல் தீரவில்லை. எனவே 2014 க்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு தற்போது அதற்கும் தேர்வு நடைபெற உள்ள சூழலில் , 2013 இல் முறையாக தேர்வு பெற்றவர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்கப் படாததை சுட்டிக் காட்டி நாம் CHIEF PMG அவர்களிடம் பேசினோம். பிரச்சினையின் நியாயத்தை உணர்ந்த CHIEF PMG அவர்கள், உரிய சட்ட ஆலோசனை செய்த பிறகு முடிவெடுப்பதாக அறிவித்தார்.
இந்தப் பிரச்சினை குறித்து நாம் பல்வேறு ஆவணங்களை நமது APMG, RECTT திரு. N . ரவி அவர்களிடமும் அளித்துப் பேசினோம். இவற்றை CHIEF PMG அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் அவர் உறுதி அளித்தார் . அதன் பேரில் பிரச்சினையில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு தற்போது பாதிக்கப்பட்டஅனைத்து ஊழியர்களுக்கும் உடனடி பணி நியமனம் வழங்கிட நமது CHIEF PMG அவர்களால் உத்திரவிடப்பட்டுள்ளது. உத்திரவின் நகலை கீழே பார்க்கவும். இந்தப் பிரச்சினையின் தன்மையை புரிந்து கொண்டு பரிவுடன் முடிவினை எடுத்த நமது CHIEF PMG உயர்திரு. T. மூர்த்தி அவர்களுக்கும் , பிரச்சினை தீர்ந்திட உறுதுணையாக இருந்த APMG, RECTT திரு. N .ரவி அவர்களுக்கும் நமது அஞ்சல் மூன்று மற்றும் NFPE GDS சங்கங்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
2. ராமநாதபுரம் அஞ்சல் மூன்று கோட்டச் செயலரின் இட மாற்றம் ரத்து.
ராமநாதபுரம் அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். ஜனார்த்தனம் அவர்கள் , LSG என்பது CIRCLE CADRE என்று காரணம் காட்டி ராமநாதபுரம் தலைமை அஞ்சலகத்தில் இருந்து பரமக்குடி தலைமை அஞ்சலகத்திற்கு கடந்த RT இல் மாற்றிட உத்திரவிடப்பட்டார். இது குறித்து ஏற்கனவே நம்முடைய தென் மண்டலச் செயலர் தோழர். தியாகராஜ பாண்டியன் அவர்களும் மாநில உதவிச் செயலர் தோழர். ஜேக்கப் ராஜ் அவர்களும் தென் மண்டல PMG யுடன் பேசியும் பிரச்சினை தீராததால் இந்தப் பிரச்சினையை மாநிலச் சங்கம் மூலம் நம்முடைய CHIEF PMG அவர்களிடம் கடந்த 24.09.2014 அன்று நடைபெற்ற நேர் காணலில் எடுத்துச் சென்றோம்.(பார்க்க மாநிலச் சங்கத்தின் கடித நகல் - வலைத்தளத்தில் பிரசுரிக்கப் பட்ட தேதி : 01.10.2014) .
தென் மண்டலத்தில் எடுக்கப் பட்ட நிலைப்பாடு சட்ட விதிகளுக்கு மாறானது என்பதை சுட்டிக் காட்டினோம். CHIEF PMG அவர்களும், உடன் இது குறித்து தென் மண்டல அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண்பதாக உறுதி அளித்தார். அதன் படியே தென் மண்டல நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. நம்முடைய மாநிலச்செயலர் தென் மண்டல இயக்குனருடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இயக்குனர் அவர்களும் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இரண்டு நாட்களில் TRANSFER COMMITTEE ஒப்புதல் தரப்பட்டு , அவரது பரமக்குடி இட மாறுதல் ரத்து செய்யப் பட்டு , ராமநாதபுரம் தலைமை அஞ்சலகத்தில் வேறு ஒரு LSG பதவிக்கு மாறுதல் அளிக்கப் பட்டார்.
இந்தப் பிரச்சினையில் உடன் தலையிட்டு தீர்த்து வைத்த நம்முடைய CHIEF PMG உயர்திரு . T. மூர்த்தி அவர்களுக்கும் , தென் மண்டல இயக்குனர் திருமதி. நிர்மலாதேவி அவர்களுக்கும் நம்முடைய மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தென் மண்டலத்தில் இனி வரும் நாட்களில் நல்ல சூழல் அமைந்திட இது போன்று ஒரு நல்ல அணுகுமுறையை நம்முடைய இயக்குனர் அவர்கள் தருவார் என்று நிச்சயம் நம்புகிறோம்.
இந்த சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்டு பிரச்சினைகளை மாநில தலைமை அதிகாரிடம் பேசித் தீர்வு காண வழி வகுத்த நம்முடைய அஞ்சல் மூன்றின் பொதுச் செயலர் தோழர். N .S . அவர்களுக்கும் நம் மாநிலச் சங்கத்தின் நன்றியினை பதிவு செய்கிறோம்.
No comments:
Post a Comment