உறங்கவிடாத மத்திய அரசு!
கடை, வணிக நிறுவன ஊழியர்களின் சேம நலனுக்கு சட்டம் இயற்ற மத்திய அரசு சிந்திக்கவில்லை
திரையரங்குகள், ஓட்டல்கள், வங்கிகள், அலுவலகங்கள் 24 மணி நேரமும் திறந்திருப்பதற்கும், இயங்குவதற்கும் புதிய சட்டம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு திடீரென்று கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பக்கம் தனது பார்வையைத் திருப்ப என்ன காரணம்? சுதந்திரமடைந்த இந்த 69 ஆண்டுகளில் கடை மற்றும் வணிக நிறுவனங்களுக்கென்று சட்டங்களே இல்லையா? யாருடைய விருப்பங்களை நிறைவேற்ற இப்புதிய நடவடிக்கை?
தொழிலாளர் சட்டங்கள்
சுதந்திரத்துக்கு முந்தைய காலனியரசு தொழிலாளர்களுக்கான எவ்வித உருப்படியான சட்டங்களையும் நிறைவேற்றவில்லை. தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்களின் ஆதரவைப் பெறுவதற்காக, சுதந்திரம் கிட்டியவுடன் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் சட்டங்களை இயற்றுவோம் என்று சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இரண்டாம் உலகப்போர் முடிவுற்றவுடன் அமைக்கப்பட்ட இடைக்கால அரசு (1946) பம்பாய் மாகாணத் தொழிலாளர் உறவுச் சட்டத்தை இயற்றியது. இன்றைக்கும் அச்சட்டம் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. 1947-ல் தொழிற்தகராறு சட்டம் அகில இந்திய அளவில் கொண்டுவரப்பட்டது.
1948-ல்தான் தொழிற்சாலைகள் சட்டமியற்றப்பட்டது. அதன்கீழ் தொழிலாளர்களின் பாதுகாப்பு, உடல்நலன், சேமநலன் பற்றிய பிரிவுகள் புகுத்தப்பட்டன. ஒரு நாள் கட்டாய ஓய்வுடன் வாரத்தில் 48 மணி நேரத்துக்கு மிகைப்பட்டு ஊழியர்களை வேலை வாங்கக்் கூடாது என்று கூறப்பட்டது. நிர்ணயித்த வேலை நேரத்துக்கு மேல் பணி செய்ய நேர்ந்தால் அதற்கு இரட்டிப்பு ஊதியமும், மாற்று விடுமுறையும் வழங்கச் சட்டம் வழிவகுத்தது. ஈட்டிய விடுப்பும், ஈட்டிய விடுப்புக்கான ஊதியமும் வழங்க நிர்ப்பந்தித்தது. பெண் ஊழியர்களை இரவு ஷிப்டில் அமர்த்துவதையும் தடை செய்தது.
இச்சட்டம் உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலை களுக்கும், அதிலும் மின்சாரத்துடன் உற்பத்தி செய்யும் ஆலைகளில் பத்துத் தொழிலாளர்களுக்கு மேல் பணியாற்றினால் மட்டுமே பொருந்தக் கூடியதாகவிருந்தது. ஆயிரக்கணக்கான கடைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சேமநலனைக் கருதும் சட்டமியற்றுவதைப் பற்றி மத்திய அரசு சிந்திக்கவில்லை.
வழிகாட்டிய தமிழ்நாடு
சுதந்திரம் கிடைப்பதற்கு முன் வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும் தனியார் வசமே இருந்தன. அவற்றில் பணிபுரிந்த ஊழியர்களின் நலனைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதே ”வணிக நிறுவனங்கள் ஊழியர் சங்கம்”(கமர்ஷியல் எம்ப்ளாயீஸ் அசோசியேஷன்). அன்றைக்கு தலைசிறந்த பாரிஸ்டராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடிய வி.ஜி.ராவ் அதன் தலைவர். அவர் சட்ட மேலவை உறுப்பினராக இருந்த காரணத்தினால் கடை மற்றும் வணிக நிறுவனங்களின் ஊழியர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக ஒரு சட்ட வடிவை தயார் செய்து, சட்டமன்றம் அச்சட்டத்தை நிறைவேற்ற உதவினார். இந்தியாவிலேயே முதன்முறை யாக உருவானதுதான் 1947-ம் வருடத்திய மதராஸ்(தமிழ்நாடு) கடை மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம்.
இப்புதிய சட்டம், ஏறத்தாழ தொழிற்சாலைச் சட்டம் போலவே தினசரி வேலைநேரம், கடைத் திறப்பு மற்றும் மூடும் நேரங்கள், மிகுதி நேர வேலைக்கு இரட்டிப்புச் சம்பளம், கட்டாய வார விடுமுறை, பெண் ஊழியர்களுக்கு இரவு ஷிப்டு தடை போன்றவற்றை உறுதிசெய்தது. குழந்தைத் தொழிலாளர்கள் அமர்த்துவதைத் தடை செய்ததுடன் நிறுவனங்களில் தூய்மை, காற்றுவரத்து, வெளிச்சம் இவற்றை உறுதிப்படுத்துவதற்கான பிரிவுகளையும் உள்ளடக்கியிருந்தது. தொழிற்சாலைகளிலிருந்தது போல் கடைகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் வலுவான தொழிற்சங்கங்கள் இருக்க மாட்டா என்ற புரிதலினால் வணிக நிறுவனங்களில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்கும் விதமாக எவ்வித முகாந்திரமுமின்றி தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்வதைத் தடைசெய்தது. வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் சங்க ஆதரவின்றியே பணி நீக்கத்தை எதிர்த்துத் தொழிலாளர் அலுவலர்களிடம் மேல்முறையீடுகள் செய்யவும் சட்டம் வழிவகுத்தது. தமிழ்நாட்டில் இயற்றப்பட்ட சட்டத்தை நகலெடுத்துப் பல மாநில அரசுகளும் அதேபோன்ற சட்டத்தை இயற்றின. தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் வலுவான தொழிற்சங்கங்கள் ஏற்படவும் இச்சட்டம் உதவியது.
கடை, வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர் களின் பாதுகாப்புக்காக அனைத்து மாநிலங்களிலும் தனிச்சட்டங்கள் இருக்கையில் மத்திய அரசு ஏன் புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும்? மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிப்பதுடன் பன்னாட்டு நிறுவனங்க ளுக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கும் செயலிது.
பெங்களுரு மென்பொருள் நிறுவனமொன்றில் வேலை பார்த்த ஒரு பெண் இரவு ஷிப்ட் முடிந்தவுடன் வீடு செல்ல நிறுவனம் அமர்த்திய வாடகைக் காரில் பயணித்தபோது, வாகன ஓட்டுநர் அவரிடம் தவறாக நடக்க முற்பட்டார். இதுதொடர்பாக கர்நாடக அரசு அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தது. இரவு ஷிப்டில் எப்படிப் பெண்களை நிறுவனம் அமர்த்தியது என்று குற்றம்சாட்டியது. அதற்கு ஆதரவாக, கர்நாடகா கடை மற்றும் வணிக நிறுவனங்களின் சட்டத்தின் பிரிவுகள் சுட்டிக்காட்டப்பட்டன. இதையடுத்து, அந்நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. சமீபத்தில் சென்னையில் உள்ள தொழிலாளர் நீதிமன்றம் மென்பொருள் பொறியாளர்களும் ஊழியர்களே என்று தீர்ப்பளித்துள்ளது. இவ்வாறாக இச்சட்டம் இந்தியாவில் செயல்படும் மென்பொருள் நிறுவனங்களின் சுதந்திரமான சுரண்டலுக்குத் தடையாக உள்ளது. இதை மாற்ற மத்திய அரசு விழைகிறது.
பெரு நிறுவனங்களின் பேராசை
அம்பானி சகோதரர்களுக்கு ஒரு பக்கத்தில் பெட்ரோல் பொருட்களின் சந்தையில் பிடிப்பென்றால் மறு பக்கத்தில் சில்லறை விற்பனையிலுள்ள உப்பு, புளி, மிளகாய் வியாபாரத்திலும் லாபம் பார்க்க முயல்கின்றனர். மால்கள், திரைப்பட அரங்குகள், உணவு விடுதிகள், மதுபானக்கடைகள் நகர்ப்புறங்களில் பெருகிவருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தவும், அங்குள்ள ஊழியர்களின் நலன்களைப் பேணவும் தொழிலாளர் சட்டங்கள் பல உள்ளன. இவை மால்கள் நடத்தும் நிறுவனங்களைப் பாதிக்கின்றன.
எவ்வித சட்டப் பின்னணியோ நாடாளுமன்ற விவாதங் களோ இன்றி தாராளமயமாக்கலை நரசிம்மராவ் தொட்டு நரேந்திர மோடி வரை தடையின்றி அமல் படுத்திவருகின்றனர். அதற்கு ஆதரவளிக்க நீதித்துறையும் பின்தங்கவில்லை. 2005-ல் உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில் இந்தியாவில் தாராளமயமாக்கல் வேரூன்றிவிட்டதாகச் சொல்லி, அதற்கு உதாரணமாகப் பெரு நகரங்களிலுள்ள விமான நிலையங்களில் மதுபானக்கடைகள் தொடங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி யுள்ளது. பெண்கள் மதுபானக்கடைகளில் மாலை நேரத்திற்குப் பிறகு வேலை செய்யக்கூடாது என்று டெல்லி அரசு போட்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. சென்னை உயர் நீதிமன்றம் 2002-ல் இரவு ஷிப்டில் பெண்களுக்கான தடை விதித்த தொழிற்சாலை சட்டத்தின் 66-வது பிரிவை ரத்து செய்தது.
மென்பொருள் நிறுவனங்கள், கால்சென்டர்கள், மால்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள், மதுபானக் கடைகள் இவற்றை ஓரளவுக்கு ஒழுங்குபடுத்திவரும் மாநில அரசுகளின் சட்டங்களைத் தவிர்க்கும் விதமாகத்தான் மத்திய அரசு புதிய கடை, வணிக நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை இயற்ற முற்பட்டுள்ளது. தடையின்றி, காலவரையற்ற வணிகம், இரவு ஷிப்டில் பெண்கள் இப்படிப் பல சலுகைகளையளித்து மோடி அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
நூறாண்டுகளுக்கு முன் சிகாகோ நகரத்தில் போர்க்கொடி தூக்கி, எட்டு மணிநேர வேலைக்கு வழிவகுத்த சட்டத் தடைகளையெல்லாம் ஒரு நொடியில் தூக்கியெறிய மத்திய அரசு தயாராகிவிட்டது. மேலும் பெண்கள் இரவு ஷிப்டில் பணிபுரியத் தடைவிதிக்கும் சட்டங்கள் சர்வதேசத் தொழிலாளர் நிறுவனத்தின் (ஐ.எல்.ஓ) தீர்மானங்கள் அடிப்படையில் கொண்டுவரப்பட்டவையே. பகல் நேரத்திலேயே பொது இடங்களில் பெண்கள் மீதான வன்முறையைத் தடுக்க முடியாத கையாலாகாத அரசுகள், இரவுப் பணிபுரியும் பெண்களை எப்படிப் பாதுகாக்கும் என்பது புரியவில்லை.
இரவெல்லாம் கடைகளையும், திரையரங்குகளையும், உணவு விடுதிகளையும், மதுபானக் கடைகளையும் திறந்துவைக்க உதவும் மத்திய அரசின் சட்ட வடிவு, மக்களை உறங்கவிடாது. உறங்கும் உரிமையும் அரசியல் சட்டம் கூறும் அடிப்படை உரிமைகளில் ஒன்றென உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பது இனி வரும் காலங்களில் நகைமுரணுக்குள்ளாகும்.
கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)
சென்னை உயர்நீதிமன்றம்.
No comments:
Post a Comment